வெல்ல முடியாததல்ல கொரொனா !
சி.ஸ்ரீராமுலு
மூத்த பத்திரிகையாளர்
அனுபவத்திலிருந்து...
"இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். அரசு அறிவித்த முதல் 'லாக் டவுன்' மார்ச் 24 ஆம் தேதியிலிருந்தே வெளி பயணத்தை அடியோடு தவிர்த்தேன்".
பக்கத்துத் தெருவிற்கு செல்ல வேண்டுமென்றாலும் கூட முக கவசத்தோடுதான் செல்வேன். சானிடைசர் (கிருமி நாசினி) பயன்படுத்துவேன். அடிக்கடி கை, கால்களை சோப்பு போட்டு கழுவுவது வழக்கமானது.
சரியாக 90 தினங்கள் கழித்து 23.6.2020 அன்று மாலை 6 மணிக்கு உடலில் ஒருவிதமான சோர்வு தெரிந்தது. இரவு சுமார் 7.30 மணிக்கு நமது பாரம்பரிய வைத்திய முறையான 'ஆவி பிடித்தேன்'. ஆனால், சாப்பிடவும் முடியவில்லை. (பிடிக்கவில்லை). சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள்ளேயே அடைந்து விட்டேன். அன்றைய இரவு முழுவதும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டேன்.
அடுத்த நாள்,(ஜூன் 24) காலை எழுந்ததும் வெந்நீரில் உப்பு, மஞ்சள்தூள் கலந்து கொப்புளித்தேன். உடலில் திடீர் மாற்றம் ஏற்பட காய்ச்சலுக்கான மாத்திரையை போட்டேன். இடையில் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. அன்றைய இரவும் குளிர், காய்ச்சல், தூக்கமின்மை பிரச்சனை என்னை விட்டுவைக்கவில்லை.
மறுநாள் ஜூன் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு, நான் வசிக்கும் பகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவிக நகர் மாநகராட்சி முகாம் சென்று கோவிட்-19 பரிசோதனையில் மாதிரி கொடுத்தேன்.
பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவரும் சாதாரண காய்ச்சல், சளிக்கு மாத்திரை கொடுத்து, ஊசி போட்டு அனுப்பினார். இருந்தபோதிலும், உடல் சோர்வடைய தொடங்கி விட்டது. படுக்கையில் திரும்பிப் படுப்பதே ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாக மாறிப்போனது. உடலின் ஒவ்வொரு செல்லிலும் வலி மட்டுமே பிரதானமாக இருந்தது.
ஜூன் 26 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு எழுந்தபோது (அது நான் வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தை கூடுதலாக 2.30 மணி நேரம் கூடுதலாகும்) உடல் முழுக்க வலி, ஒரு விதமான காய்ச்சல், ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. நிலைமையை உணர்ந்து கொண்டேன்.
வீட்டில் இருந்தவர்கள் சற்று பதற்றமடைந்தனர். அந்த நேரம் எனது மனைவியின் தம்பி வீட்டுக்குள் வர, அடுத்த சில நிமிடங்களிலே இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவ மனைக்கு சென்றோம். அங்கு பரிசோதித்த மருத்துவர், உள் நோயாளியாக சுமார் 8 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் (அப்ரிவேஷன்) இருக்க வேண்டுமென்றார். நாங்களும் ஒப்புக் கொண்டோம்.
பிறகு சிகிச்சை துவக்கினார்கள். அன்றைய இரவு சற்று காய்ச்சல், வலி குறைந்தது. 28 ஆம் தேதி காலை மருத்துவமனையிலிருந்து ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தோம்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், சென்னை மாநகராட்சி பணியாளர் ஒருவர் பட்டியலுடன் வீட்டின் முன்பு நின்று எனது பெயரை உச்சரித்ததும் கோவிட்19 "பாசிட்டிவ்" என்று முடிவு செய்து விட்டோம்.
என் குடும்பத்தினர் தொடர்ந்து பதட்டமடைந்தனர். என்னை ஆம்புலன்சில் அழைத்துச் சென்றுவிடுவார்கள் என மிகவும் பயந்த எனது குடும்பத்தினர் என் மச்சினனை உடனே உதவிக்கு அழைத்தனர்.
என் நிலை கண்டு என் குடும்பத்தினர், உறவினர்கள் பதற்றம் அடைவதை பார்க்க முடிந்தது. அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டு வைத்தியம் பார்க்க அவர்களுக்கு விருப்பமில்லை.
(கட்சித் தலைவர்கள் கூறிய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை)
நானோ, மாநகராட்சி நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க, மீண்டும் இருசக்கர வாகனத்தில் எனது மைத்துனருடன் அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றோம். பாதுகாப்புக்கு காவலர்கள் இருவர் பின் தொடர்ந்தனர்.
அயனாவரம் மருத்துவர்கள் ஒருமுறைக்கு மூன்று முறை பரிசோதனை செய்தனர். அனைத்தும் மாலை 6 மணிக்கு முடிந்தது. 20 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அனுமதி கொடுத்தனர்.
நான் வீட்டிற்கு திரும்புவதற்குள் 'ஸ்டிக்கர்' ஒட்டுவது, நோய்த்தடுப்பு எச்சரிக்கை பேனர் கட்டுவது, தடுப்பு சுவர் (இரும்பு தகடு) அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மாநகராட்சி பணியாளர்கள் செவ்வனே செய்து முடித்து விட்டனர்.
வீட்டில் எனக்கு கழிவறையுடன் கூடிய தனி அறை ஒதுக்கி தரப்பட்டது. வேறு வழியின்றி நான் என் இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன்.
ஆனாலும், காய்ச்சல், ஒருவிதமான கரகரப்பு, வயிற்றில் உணவு செரிக்காத உணர்வும் இருந்தது. உடல் லேசாக நடுங்குவதையும் உணர முடிந்தது.
(இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தீக்கதிர் அனைத்து பதிப்பு தோழர்கள், சக பத்திரிகையாளர்கள், சங்கத் தலைவர்கள், உறவினர்கள் ஒருபுறம் வரிசையாக செல்போனில் தொடர்பு கொள்ள)
மறுபுறத்தில் மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தன்னார்வ, மருத்துவர்கள் என பலரும் நேரில் வந்ததுடன், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அடிக்கடி நலம் விசாரித்ததோடு எனக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.
வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட மூன்று நான்கு தினங்கள் மிகவும் சிரமப்பட்டேன். மீண்டும் சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு தொல்லைகளால் உணவருந்துவது குறித்த உணர்வே இல்லாமல் இருந்தது. எனது உடல் தன்னுடைய தேவையான பசி, தாகம், குளிர், வெப்பம் இது குறித்து எனது மூளைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தண்ணீர் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளவும் முடிந்தது.
நானே மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாக புரிந்துகொண்டேன். இந்த நோயை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.
பிறகு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஹோமியோபதி மடித்து வைத்திருக்கும் சென்றேன். ஆனாலும் மாற்றம் தெரியவில்லை.
மருந்தில்லாத ஒரு நோய்க்கு மருத்துவர் என்ன செய்வார் என்ற எண்ணமும் எனது மனதை தேற்றிக் கொண்டே இருந்தது.
அந்த சமயம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர் யுனானி மருத்துவம் குறித்த செய்திக்காக என்னை தொடர்பு கொண்டார். அப்போது, அது நிலைமையை அவரிடம் விளக்கினேன்.
அவரும் அடுத்த நிமிடமே, யுனானி மருத் துவரிடம் இணைப்பில் சேர வரும் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே எனக்கு வைத்தியம் பார்த்து வரும் ஆங்கில மருத்துவரை தொடர்பு கொண்டேன். அவரும் பச்சைக் கொடி காட்டினார்.
யுனானி மருத்துவரை அணுகினேன். அவரும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மாத்திரைகளை வீட்டிற்கே அனுப்பி வைத்தார். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்ட இரண்டு நாட்களில் உடலில் நல்ல முன்னேற்றத்தை காண முடிந்தது. காய்ச்சல் அரவே நின்றுவிட்டது அதற்கான அறிகுறியே இல்லை. நுகர்வுத் தன்மையும் கிடைத்தது. உணவும் எடுத்துக் கொண்டேன். இதை விட முக்கியம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தூக்கமின்மை பிரச்சினையும் ஓய்ந்தது.
என்னை வெளியில் இருந்து கவனித்துக் வரும் எனது குடும்பத்தினர், எனது மருத்துவ சகோதரர், மாநகராட்சி களப்பணியாளர்கள், அதிகாரிகளின் நம்பிக்கை மிக விரைவில் குணப்படுத்திவிடும் என்று உறுதியாக நம்புகிறேன்.
மருத்துவரின் ஆலோசனை படி தேவையை அறிந்து உணவு முறைகளில் மாற்றத்தை கொண்டு வந்தோம். சூடான வெந்நீர், இஞ்சி சாறு, ரசம், எலுமிச்சைத் தோலுடன், மஞ்சள் தூள், மிளகு, சீரகம், உப்பு, பூண்டு, வேப்பிலை கலந்த கசாயம், கபசுரக் குடிநீர். வெந்நீர் அதிக அளவு, அவித்த முட்டை, இட்லியை உணவாக எடுத்துக் கொண்டேன்.
தொண்டையில் உருவாகும் இந்த கிருமியை நுரையீரலுக்கு அனுப்புவதும், வயிற்றுக்கு அனுப்புவதும் நம் கையில்தான் உள்ளது.
புகை, மது போன்ற தீய பழக்க வழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் கிருமி நுரையீரலுக்குச் சென்று அது உங்களை வென்று கொண்டிருக்கிறது என்று பொருள். அந்தப் பழக்க வழக்கம் இல்லை என்பதால் அதை நீங்கள் வென்று விட்டீர்கள் என்று பொருள். (இந்தப் பழக்கம் இல்லாதவர்கள் நானும் ஒருவன்)
வயிற்றுக்கு அனுப்பும் வேலையை நீங்கள் குடிக்கும் சூடான பானம் செய்து விடும். பயம் கொள்ள தேவையில்லை. மஞ்சள், உப்பு, மிளகு, சீரகம், பூண்டு, மாத்திரை பயன்படுத்தி ஒரு நாளைக்கு மூன்று முறை வெந்நீரில் 'ஆவி பிடித்தேன்'.
மூச்சுவிட மிகவும் சிரமமானால் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டால் நன்றாக மூச்சுவிட முடியும்.
கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல! நாம் வாழப் பிறந்தவர்கள். கண்ணுக்குத் புலப்படாத ஒரு வைரஸிடம் தோற்றுப்போகுபவர்கள் அல்ல!!