நகைச்சுவைங்கறது மனுஷனுக்கு மட்டுமே உள்ள ஒண்ணு. மிருகங்களுக்கு அந்த உணர்வு கிடையாது. அதுனால வருத்தம் அடைஞ்ச விலங்குகள் எல்லாம் ஒண்ணாச் சேந்து, ’நமக்கும் நகைச்சுவை உணர்வு வேணும். அதுக்காக எல்லா மிருகங்களும் ஒரு நகைச்சுவை சொல்லணும். அதை கேட்டு மத்த எல்லா மிருகங்களும் சிரிக்கணும்’ அப்பட்டின்னு ஒரு போட்டி வச்சது. சிங்கம் தான் அதுக்கு தலைமை. ஒரு மிருகம் சொல்ற நகைச்சுவையைக் கேட்ட உடனே மத்த விலங்குகள்லாம் சிரிக்கணும். அப்படி சிரிக்கல்லைன்னா நகைச்சுவை சொல்ற மிருகத்துக்கு ஒரு அடி கொடுக்கணுங்கறது போட்டியோட விதி.
குரங்கு முதலில் வந்து ஒரு நகைச்சுவை சொன்னுது. அதைக் கேட்டதும் மற்ற எல்லா விலங்குகளும் சிரிச்சுது. ஆனா ஆமை மட்டும் சிரிக்கலை. அதுனால குரங்குக்கு ஒரு அடி விழுந்துச்சு. அப்புறமா ஒட்டகம் வந்து ஒரு நகைச்சுவை சொன்னுது. அப்பவும் ஆமை சிரிக்கலை. அதனால ஒட்டகத்துக்கும் அடி. மூணாவதா நகைச்சுவை சொல்ல கரடி வந்துது. கரடி வந்து நின்னவுடனேயே ஆமை சிரிக்க ஆரம்பிச்சுது. கரடி எதுவும் நகைச்சுவை சொல்லவேயில்லை. ஆனாலும் ஆமை விடாம சிரிச்சிக்கிட்டிருந்திச்சு. ஆமை ஏன் சிரிக்குதுன்னு யாருக்கும் புரியல.
உடனே சிங்கம் ஆமையைக் கூப்பிட்டு, ’கரடி இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே. அதுக்குள்ள ஏன் சிரிச்சே’ன்னு கேட்டது.
அதுக்கு ஆமை, ’குரங்கு முதல்ல பேசிச்சு இல்லீங்களா அதை நினைச்சுச் சிரிச்சேங்க’ அப்படின்னுச்சாம்.
இந்த மாதிரிதான் பல பேருங்க எதை எதை எப்ப எப்பச் செய்யணுமோ அதை அதை அப்பப்பச் செய்யாம பின்னாடி காலங் கடந்து செய்யறாங்க. அதுனால அவங்களுக்கும் கஷ்டம். மத்தவங்களுக்கும் கஷ்டம்கறதை அவங்க புரிஞ்சுக்கணும்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக