Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

வியாழன், 11 மே, 2017

தலையாட்டி பொம்மைகள்

அவன் என் நண்பன்தான். அதிபுத்திசாலி. கற்பூர மூளை என உதாரணம் கொடுக்கலாம்   ஆனால்...... ( இந்த வார்த்தைகளை பதிவின் முடிவில் கொடுத்திருக்கிறேன். )

தஞ்சாவூரில் இறங்கும் போது மணி பத்து. நாங்கள் பார்க்க வந்த நபர் மாலையில்தான் வருவார். அதுவரை...?

ஆகா ..இது கண்ணாத்தாள் ஊர்லே? Messenger ஐ திறந்து போன் செய்தேன்.

" Am i speaking to Rohini Krishna?"

" சார் நீங்களா? எங்கேயிருந்து சார்? "

" தஞ்சாவூர்ல இருந்துதான்.  Sorry Doctor உங்க தமிழ் நேசம் தெரிந்தும் speaking in English ..In fact தமிழ்ல பேசனும்னு try பண்றேன். சுத்த தமிழன் ல்லயா ..முடியல"

"டாக்டர் ஒங்க க்ளீனிக்கு direction சொன்னா i will drop in."
" நீங்க அங்கேயே இருங்க.. நான் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்ற கலைஞர் வீட்டுக்கு போயிக்கிட்டுருக்கேன். நீங்களும் வரலாம்"

###

தலையாட்டி பொம்மைகள் by Rohini krishna

தஞ்சை நகரின் வடக்கு எல்லையில், திருவையாறு போகும் சாலையில் உள்ள, பச்சைப் பசேலென வயல்கள் சூழ்ந்த அம்மன்பேட்டை என்ற அழகிய ஊரில், இந்த பொம்மையைப் பாரம்பரியமாகத் தயாரிக்கும் குடும்பங்கள் வசிக்கின்றன.

வாணியக்காரத் தெருவில் நுழைந்து, பொம்மை என்று ஆரம்பித்தவுடனே, சிறுவர்கள், திரு. ரவிச்சந்திரன் வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றார்கள்.
“மூன்று, நான்கு குடும்பங்கள் மட்டுமே, இப்போது, இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம்”, என்றபடி பழைய நினைவுகளை அசைபோடத் துவங்கினார், அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும், ரவிச்சந்திரன்.

“மாயவரத்திலிருந்து, இங்கு வந்து செட்டிலான, கோவிந்தராஜன் என்னும் பெரியவர், எழுபது வருடங்களுக்கு முன்னர், இவ்வூரில் பொம்மை செய்வதில் கொடிகட்டிப் பறந்தார். பலபேருக்கு குருவாக இருந்து கற்றுக் கொடுத்தார்.”

“பல மாணவர்கள் தொழில் கற்றுக் கொண்டோம். விடியற்காலையிலிருந்து, சாயங்காலம் பொழுது சாயும் வரை, அவர் வீட்டில் வேலை செய்வோம். ரேடியோ சிலோன்ல பாட்டு ஓடிட்டே இருக்கும். அதுல ரெண்டு பாட்டு முடியறதுக்குள்ள, வீட்டுக்கு ஓடிப்போய் சாப்பிட்டுட்டு ஓடியாந்துடணும்”

“தினசரி சம்பளம் அஞ்சு பைசா கொடுப்பாரு, அப்புறம், பத்து காசு, பதினஞ்சு காசாகி, ஒரு ரூவா ஆறதுக்கு, எட்டு வருஷம் ஆச்சு. நான் தனியா தொழிலுக்கு வந்துட்டேன்”
ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்ற நிறைவு, ரவிச்சந்திரனின் குரலில்.

கோவிந்தராஜன் ரொம்பக் கண்டிப்பானவராம். ஒவ்வொரு நாளும் ரெடியாகும் பொம்மைகளுக்கு, நாளின் இறுதியில், டெஸ்டிங் நடக்குமாம். ஒவ்வொரு பொம்மையாய் சாய்ப்பாராம். எழுந்து ஆடாவிடில், காங்கோவில் வரும் கொரில்லா போல், இரண்டு கைகளாலும் பொம்மையை நசுக்கி உடைத்து விடுவாராம்.

பொம்மையின் அடிப்பாகத்தில் தான் முழு வெயிட்டும் இருக்க வேண்டும். களிமண்ணில், சில பவுடர்களைக் கலந்து, கிண்ணம் போன்ற இதைத் தயாரிக்கிறார்கள்.. அடிப்பாகத்தின் மத்தியில், மிகச்சரியாக , இந்த கனம் குவிந்தால் மட்டுமே புவியீர்ப்பு சக்தியின் உதவியோடு, ஈக்விலிபிரியதுடன் பொம்மை ஆடுகிறது. இது சற்றே பிசகினாலும் பொம்மை ஆடாது.

மேல்பாகத்திற்கு முதலில் களிமண்ணில் மோல்டு, தயாரித்துக் கொள்கிறார்கள்.. பேப்பர்மெஷ் மற்றும் சிலவற்றைக் கூழாக்கி, மாவு போல் பிசைந்து, சப்பாத்திக் குழவியால், ஒரு கல்லில் தேய்க்கிறார்கள்.. இதை அச்சின் மேல் பூசி, நன்றாகக் காய வைக்கிறார்கள். பிறகு, கீழ்ப் பாகத்தையும், மேல்ப்பாகத்தையும் இணைக்கும் வேலை.. அடுத்து, உப்புத் தாளால், பொம்மையைத் தேய்த்து, வழவழப்பாக்கும், மட்டி பார்ப்பது. ஆபரணங்கள், நுணுக்கமான பாகங்களை வருவி விடுவது
இறுதியாக வர்ணம் பூசும் வேலை. முன்பெல்லாம், சொந்தமாகத் தயாரிக்கும் வர்ணங்களையே பூசுவார்களாம். இப்போதெல்லாம் கால மாறுதலுக்கேற்ப, ஏஷியன் பெயின்ட்.
இறுதியாக, சிலைகளைப் போன்று தான் சுத்தபத்தமாக கண்களைத் திறப்பார்களாம்.
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலம் என கண் கவர் வண்ணங்களில், நம் உள்ளம் கவர் பொம்மைகள் ரெடி.

இருப்பினும், பொம்மை செய்யும் குடும்பங்களின் இளைய தலைமுறை ஒருவரும் இதில் இறங்கவில்லை. ரவிச்சந்திரனின் மகன்கள் இருவரும் வெளியூரில் வேலை பார்க்கின்றனர்.
“ஒரு பொம்மைக்கு பதினஞ்சு ரூவா கிடைக்குது.  நானே ஆர்டர் வரப்ப செஞ்சுட்டு, வெளி வேலைக்கு போய் சம்பாதிச்சு தான் குடும்பம் நடத்துறேன்.”
“இன்னிக்கு விலைவாசிக்கு, இதையே தொழிலா நம்பி இருக்க முடியாது”
“வெளி நாட்டுக் காரங்க தான் வந்து, ஆச்சர்யமா, ஆசையா பார்த்துட்டுப் போறாங்க.” என்கிறார்.

நசிந்து வரும் இப்பாரம்பரியக் கலையைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜியாக்கிராஃபிக்கல் இன்டிகேஷன்ஸ் ஆஃப் கூட்ஸ் ஆக்ட் 1999 ன் படி, இந்திய அரசாங்கத்தால், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சை மண்ணின் உரிமையெனப் “புவிக் குறியீட்டு எண்” வழங்கப்பட்டுள்ளது, பெரும் ஆறுதல்.
அம்மன் பேட்டையிலிருந்து திரும்பி வரும் போது, யூ-ட்யூபில் பார்த்த பாடல் மனக்கண்ணில் ஓடியது.
“தஞ்சாவூரு பொம்மை இது
தலைய தலைய ஆட்டுதே
கொஞ்சி கொஞ்சி சிரிக்குதே
கும்மாளந்தான் போடுதே
கொஞ்சம் கூடப் பஞ்சமில்லை
கொழு கொழுன்னு இருக்குதே
நெஞ்சம் மகிழச் சிரிக்குதே
வாயிருந்தும் பேசல”

தாம் உருவாக்கும் பொம்மைகளைப் போலவே, இந்தச் பொம்மைச் சிற்பிகளும், கொஞ்சம் கூடப் பஞ்சமில்லாமல், நெஞ்சம் மகிழச் சிரிக்க வேண்டும் என்பதே நம் ஆசை.

ரோஹிணி கிருஷ்ணா
#####

" Thank you doctor. Great experience. நாங்க அப்புறம் வர்றோம். உங்ககிட்ட நிறைய பேசனும்னு plan. Some other time..."

டாக்டரிடம்விடை பெற்றுக் கொண்டு திரும்பும் போது அவன் சொன்னது..

" என்னடா பொம்மை பண்றாங்க..ஒண்ணுத்துக்கும் காலே காணோம்."
Ctr Krishnan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக