வெற்றி அணைவருக்குமே
--------------------
நூறாவது அடியில் உடையும் கல்
சிலர் அடிக்கடி சொல்வதைக் கேட்கிறேன். “நான் ஒரு ராசியில்லாதவன்/ள். எல்லோரும் ஒருமுறை போய் செய்து முடிக்கிற வேலையை நான் பத்துமுறை போனால்தான் முடிக்க முடியும்” என்று.
உண்மையில் அப்படித்தானா?
இது ஒருவித எதிர்மறைச் சிந்தனையே..
இதுபோன்ற நபர்கள் என்ன செய்கிறார்கள்? ஒரு நபரைச் சந்திக்கப் போகும் முன்பே
‘அவர் இருக்கமாட்டார்.
நான் வீணாகப் போய்விட்டுத் திரும்பப் போகிறேன்’ என்று மனதிற்குள் ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொண்டு போகிறார்கள்.
அங்கு போனால் அவர் இருக்க மாட்டார். ‘நான் நினைத்தது சரியாகிப் போய்விட்டது’ என்று தன்னை இன்னும் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கிவிடுகிறார்கள்.
ஒருவேளை அவர் பார்க்கச் சென்ற நபர் இருந்தாலும், ‘ஏதோ குருட்டு அதிர்ஷ்டம் இன்று இவரைப் பார்க்க முடிந்தது’ என்று அதற்கும் ஒரு அதிர்ஷ்டக் காரணம் தேடிவிடுவார்கள்.
பொதுவாக நம் மனம்தான் அநேகமாக எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆனால் அதேசமயம், அந்த எதிர்மறையான சூழ்நிலையை வெல்வதற்கும் நம் மனம்தான் துணை நிற்க வேண்டியிருக்கிறது.
எதிர்மறைச் சூழ்நிலைகளை எப்படி கையாள்வது்?
ஒரு வங்கிக்கு, அரசு அலுவலகத்திற்குச் செல்லும்போதே முதல் ஆளாகப் போய் நிற்பது நல்லது. 9 மணி வங்கிக்கு சரியாக 9 மணிக்குப் செல்வது சிறந்தது.
அரசு அலுவலகங்களுக்கும் அப்படியே. நேரம் ஆக ஆக, இருக்கையில் இருக்க வேண்டியவர் எழுந்து வெளியே சென்று விடவோ, வேலையில் சலிப்படைந்திருக்கவோ வாய்ப்பு உண்டு. அன்று முடிக்கக்கூடிய வேலையைக்கூட, ஏதேனும் காரணம் சொல்லி “நாளை வாருங்கள்” என்று தட்டிக் கழிக்கும் வாய்ப்பு உண்டு. அதனால் எதற்கும் முதல் ஆளாகப் போய் நிற்பது நல்லது.
கூடவே, ஒரு அலுவலகத்திற்குச் சென்று பார்த்தால் தெரியும்…
படிப்பறிவில்லாத எத்தனையோ பேர் வந்து நிற்பார்கள். அவர்களிடம் அலுவலகர்கள், “இந்தந்த சான்றிதழ்கள் வேண்டும். அதையெல்லாம் எடுத்துக் கொண்டு இரண்டு நாட்கள் கழித்து வந்து பாருங்கள்” என்று அனுப்பிவிடுவார்கள். படிப்பறிவில்லாத அவர்கள் நாலைந்து முறை அலைவார்கள். அவர்களைவிட நாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சில இடங்களில் என்னென்ன சான்றிதழ்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நமக்கும் தெரியாது. அதனால், அந்த வழியே வேறு வேலை காரணமாகச் செல்லும்போது, விலாவாரியாகக் கேட்டு வைத்துக் கொண்டால், மறுநாள் அநேகமாக ஒரே நாளில் வேலையை முடித்துவிட முடியும். அல்லது ஏற்கனவே அனுபவஸ்தர்களிடம் கேட்டுக் கொள்வதும் பலனளிக்கும்.
சிலவற்றிற்கு இரண்டு முறை, மூன்று முறை அலைந்து திரிந்தே ஆக வேண்டும். அது எல்லாருக்கும் பொதுவான அனுபவம்தான். அந்த உண்மையையும் உணர்ந்திருக்க வேண்டும். அதுவே authentic thinking.
என்னால் சட்டென ஒரு காரியத்தைச் செய்ய முடியாது என்ற எண்ணம் வந்துவிட்டால், அதை ஒத்திப்போடவே தோன்றும். ஆக, இன்னும் தாமதமாகிவிடுகிறது. அதைவிட முதல் அடி எடுத்துவைத்துவிட்டால், மீதி வழியை அதுவே காண்பித்துவிடும். பிறகு எல்லாருமே ராசியானவர்கள் ஆகிவிடுவார்கள்.
வெற்றியாளர்கள் பலர் ஒரே முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று நினைப்பது அறியாமை. அவர்களிடம் கேட்டால் சொல்வார்கள் எத்தனை முயற்சி தோல்வியுற்றதென.
நூறு சம்மட்டி அடிகளில் ஒரு கல் உடைகிறது என்றால், நூறாவது அடியை முதலிலேயே அடிக்க முடியாது. முந்தைய தொண்ணூற்று ஒன்பது அடிகளில் அந்தக் கல் பலவீனம் அடைந்திருக்கிறது என்பதே உண்மை.
வெற்றி அணைவருக்குமே
வள்ளுவரின் வழிதோன்றலோ தாங்கள் .
பதிலளிநீக்குவாழ்க வளர்க எம்மான்.