Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

செவ்வாய், 30 ஜனவரி, 2024

கிழக்கிந்தியக் கம்ப்பெனி உருவாக காரணம் என்ன?

வரலாறு
1592 - கிழக்கிந்தியக் கம்ப்பெனியைத் தொடங்குவதற்குத் தூண்டுகோலாய் இருந்த, மாட்ரே-டி-டியூஸ் என்ற ஸ்பானிய வணிகக் கப்பலை இங்கிலாந்து கைப்பற்றியமை நிகழ்ந்தது. 

1585-1604இல் நடைபெற்ற ஆங்கிலேய-ஸ்பானியப் போரின்போது கைப்பற்றப்பட்ட இந்த ஒரு கப்பலில் மட்டும் இருந்த அரை மில்லியன் பவுண்டு மதிப்புள்ள சரக்குகள், அன்றைய இங்கிலாந்து அரசின் கருவூலத்திலிருந்த மொத்த செல்வத்தில் கிட்டத்தட்ட பாதி என்பதே, இங்கிலாந்தின் செல்வந்தர்களை கிழக்கத்திய நாடுகளுடனான(இந்தியாவுடனான!) வணிகத்தின்பால் திருப்பியது.

 ஃப்ளோரஸ் சண்டையில், ஐந்து மணி நேரம் போராடி, இந்தக் கப்பலைக் கைப்பற்றி, இங்கிலாந்துக்குக் கொண்டுவந்தபோது, இங்கிலாந்து அதுவரை கண்டிராத மிகப்பெரிய கப்பலாக இது இருந்தது. இந்தியா, சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்கம், வெள்ளி, முத்துக்கள் என்று தொடங்கி, மிளகு, பட்டை, கிராம்பு என்று மிகநீண்ட பட்டியலாக இருந்த, 900 டன் விலை மதிப்புமிக்க பொருட்கள் மட்டுமின்றி, கப்பலிலிருந்த மாலுமியின் கையேடும் இந்தியா, சீனா, ஜப்பான் உடனான வணிகம் குறித்த பல்வேறு தகவல்களை அளித்து, ஆங்கிலேய வணிகத்தின் தொடக்கத்திற்கு அடித்தளம் அமைத்தது.
 ஸ்பானியர்களும், போர்ச்சுகீசியர்களும் மட்டுமே அறிந்திருந்த பசிஃபிக் பெருங்கடலில் பயணித்த முதல் ஆங்கிலேயர் ஃப்ரான்சிஸ் ட்ரேக்தான். தொடக்கத்தில் அமெரிக்கக் கண்டத்திலிருந்த ஸ்பானியக் குடியேற்றங்களைக் கொள்ளையிட்டு, தங்கம்-வெள்ளியைக் கொண்டுவரவே சென்ற அவர், பின்னர் மணமூட்டிகள் தீவு என்றழைக்கப்பட்ட மலுக்கு தீவுகளுக்கு(இந்தோனேஷியா) சென்று கிராம்பு, ஜாதிக்காய் போன்றவற்றுடன் திரும்பியபோது, இங்கிலாந்தின் நாயகனாகவே கொண்டாடப்பட்டார் என்பதிலிருந்து, கடற்பயணங்களில் இங்கிலாந்துக்கிருந்த திறன் அவ்வளவுதான் என்பது புரியும். 

1588இல் இங்கிலாந்தின்மீது படையெடுத்துவந்த ஸ்பானியக் கப்பலணியை வென்று, சரக்குகளுடன் கப்பல்களைக் கைப்பற்றியபோதுதான் இங்கிலாந்தின் வணிகர்கள் முதன்முறையாக இந்தியாவுடனான வணிகம்குறித்துச் சிந்தித்தனர்.

 1591இல் அரசி அனுமதியளிக்க, மூன்று கப்பல்களில் ஜேம்ஸ் லங்க்காஸ்ட்டர் இந்தியா நோக்கிப் பயணித்ததே ஆங்கிலேயர்களின் முதல் இந்தியப் பயணம். வழியில் தென்பட்ட அனைத்துக் கப்பல்களையும் கொள்ளையிட்டு, இலங்கை, மலாய் தீபகற்பம் ஆகியவற்றை அடைந்து, திரும்பும் வழியில் பெரும் சேதங்களைச் சந்தித்து, வெறும் 25 பேருடன் 1594இல் லங்க்காஸ்ட்டர் இங்கிலாந்து திரும்பினார். ஆனாலும், இதற்கிடையில் கைப்பற்றப்பட்டிருந்த மாட்ரே-டி-டியூஸ் கப்பல், இந்தியாவுடனான வணிகத்தால் கிடைக்கும் பெரும் செல்வத்தை உணர்த்தியிருந்த நிலையில், லங்க்காஸ்ட்டரின் பயணத்தில் கிடைத்த அனுபவங்களையும், தகவல்களையும் அடிப்படையாகக்கொண்டே, ஆங்கிலேயர்களின் இந்திய வணிகம் தொடங்கப்பட்டது. 
1600இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்ப்பெனி தொடங்கப்பட, 

1602இல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்ப்பெனியும் தொடங்கப்பட்டது!

ஆக்கம் : அறிவுக்கடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக