Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

வியாழன், 27 ஏப்ரல், 2017

அச்சமூட்டி பார்க்காதீர்கள் ... நேர்மையாளர்கள் அஞ்சுவதில்லை

#கபடங்கள்
அச்சமூட்டி பார்க்காதீர்கள் #சமஸ்
நேர்மையாளர்கள் அஞ்சுவதில்லை....
கம்யூனிஸ்ட்டுகளின் சிறு கூட்டத்தை பார்த்துத்தான் மக்கள் விரோதிகள் அஞ்சி நடுங்குகிறார்கள்...

இடதுசாரிகள் விமர்சனங்களை வரவேற்கிறோம் சமஸ்.
ஆனால் அதில் ஒரு நேர்மையான அணுகுமுறையை எதிர்பார்க்கிறோம்..

வளர்ச்சியின் நாயகனாக மோடி நிற்கவில்லை சமஸ். அப்படியான தோற்றத்தை உங்களை போன்ற ஊடகங்களை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். உலகமயத்தை உள்வாங்கி என்ன வளர்ச்சியை மோடி கொண்டு வந்து விட்டாரென்று ஒரு பட்டியல் கொடுங்களேன்.

ஹிட்லர் வழியில், கோயபல்சுகளின் பாதையில் எல்லாவற்றிலும் போலியான பிம்பத்தை உருவாக்குகின்றனர். அன்று ஒரு கோயபல்ஸ்.. இன்று பார்க்கும் ஊடகங்கள் எங்கும் கோயபல்சுகளாக நிறைந்துள்ளனர்.

நீங்கள் சொல்ல வருவதுதான் என்ன?

உலகமயத்தை சிரமேற்கொண்டு மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு செயல்படுத்தியது. அதன் தாக்கம் சாமானிய மக்களை பாதித்தது.. அதை சிறப்பாக செய்ய பா.ஜ.க தனது கார்பரேட் முதலாளிகளின் ஆதரவோடு பல லட்சம் கோடிகள் செலவு செய்து ஆட்சியை பிடித்தது.

உலகமயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் காங்கிரசை வெற்றி பெற செய்ய மாட்டார்கள் என்பது முதலாளிகளுக்கு தெரியும். இந்த இடத்தை இடதுசாரிகள் பிடித்து விட்டால் தங்களது லாபவெறி தடைபட்டு போகும் என்ற நோக்கோடு BJPயை முதன்மைப்படுத்தி, லட்சம், கோடிகள் என வாரி இரைத்து மோடி மஸ்தானை ஆட்சியில் ஏற்றியது. இப்போது அவர்கள் செலவு செய்த பணத்தை வட்டியும் முதலுமாக மீண்டும் கொள்ளையடித்துக் கொள்ள மோடியை வைத்து வழிவகைகளை செய்து கொள்கின்றனர்.  சிறப்பாக கொள்ளையடித்துக் கொண்டுள்ளனர்.

சீன பொருளாதாரத்தை இந்திய கம்யூனிஸ்ட்டுகள் முழுமையாக புறக்கணித்ததாக யார் உங்களுக்கு சொன்னார்கள். தெளிவு வேண்டுமென்றால் தோழர். யெச்சூரி அதுபற்றி எழுதியுள்ளதை வாசித்துவிட்டு அடுத்தக் கட்டுரையை எழுதுங்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகளையும், ஆவணங்களையும் வாசிக்காமலே எப்படி கம்பு சுற்றுகிறீர்கள் சமஸ். சீன பாதையா, ரஷ்ய பாதையா என்று விவாதித்து இந்தியாவிற்கான சோஷலிச பாதை என்பதை தீர்மானித்த ஆவணங்களை சற்று புரட்டி பாருங்கள் அல்லது தோழர். EMS எழுதிய இந்தியாவிற்கான சோஷலிச பாதை என்ற நூலை படித்து விட்டு கம்யூனிஸ்ட்டுகள் பற்றி கம்புசுற்றுங்கள்.

உலகமயத்தை உள்வாங்கியதாக நீங்கள் சொல்லும் BJP, RSS ஏன் இன்னும் பழமைவாதத்தை திணித்துக்கொண்டிருக்கிறது? மாடுகளை பாதுகாக்க ஏன் மனிதர்களை கொல்கிறது?

ஏன் பெண்களை கோவிலுக்குள் மாதவிடாய் காலத்தில் வரக்கூடாது என்கிறது..? ஏன் தலித் மக்களை வஞ்சிப்பதை நியாயப்படுத்துகிறது..
இது தான் உலகமயத்தை உள்வாங்கிய வளர்ச்சியா சமஸ்?

இது ஹிட்லரின் வழிமுறை. வளர்ச்சி என்று வாய் கிழியப் பேசுவோம் ஆனால் முதலாளிகளுக்கு சேவகம் செய்வோம். மக்கள் இதன் மீது கவனம் செலுத்தாத வகையில் இனவெறி, மதவெறியை தூண்டி அவர்களை திசைதிருப்புவோம். உணர்சிபூர்வமாகவே மக்களை நிற்க வைத்து அவர்களை சிந்திக்கவிடாமல், உண்மையான எதிரியை பாதுகாத்து அவர்களுக்குள்ளாகவே மோதவிட்டு வேடிக்கை பார்ப்போம் என்பது தானே அது.

சீனா, ரஷ்யா எல்லாம் சென்ற நீங்கள் ஜெர்மனிக்கும் போய் இக்கருத்தை தேடி பார்த்திருக்கலாம்.

எங்களின் பலவீனங்களை சுட்டியமைக்கு நன்றி. எங்கள் எதிரிகளின் வளர்ச்சியை நாங்களும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் நாங்கள் அவர்களை எதிர் கொள்ள அச்சப்படவில்லை....

ஹிட்லரும், முசோலினியும் மக்கள் சக்தியால்தான் தூக்கி எரியப்பட்டார்கள். அட்டூழியங்களின் அரசர்களாக இருந்த இவர்களின் முடிவுகள் பரிதாபகரமாக நிகழ்ந்ததை உங்கள் கட்டுரைகளில் நினைவு கூறுங்கள்...

எங்களை எச்சரியுங்கள், ஆனால்
அச்சமூட்டி பார்க்காதீர்கள் சமஸ்...
நேர்மையாளர்கள் அஞ்சுவதில்லை..
நேர்மையாளர்களின் சிறு கூட்டத்தை பார்த்துத்தான் அவர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்...

ஏன் தெரியுமா?

நாங்கள் பாரதி பாடிய "அக்கினி குஞ்சி" கள். அவர்களை பொசுக்கிடும் தீரம் எங்களிடம்தான் இருக்கிறது என்பது அவர்களுக்கும் தெரியும்.

உங்களுக்கும் தெரியும்... சமஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக